நடிகை ஒருவரின் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகப் புகார் அளிக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பிற்கு நிபந்தனைகளுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மற்றும் அவரின் சகோதரர் அனூப் உட்பட 6 பேர் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திலீப் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 10ம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் உள்ளிட்ட 6 பேரும் மனுதாக்கல் செய்தனர்.
திலீப்பிற்கு முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். கோர்ட் உத்தரவின் பேரில் 3 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு திலீப் நேரில் ஆஜரானார்.
சாட்சிகளை கலைக்கக் கூடாது, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். திலீப்பிற்கு வழங்கிய முன் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல் முறையீடு செய்ய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.