தமிழகத்தில் 26 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 1600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதை இன்று மதியம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் கூறிய சில முக்கிய விஷயங்கள் பின்வருமாறு…
- கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும்.
- முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும்.
- முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி.
- முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி.
- முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி.
- தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி.
- முழு ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம்போல் செயல்படும்.
- வங்கிகளில் 33% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- முழு ஊரடங்கு காலத்தில் ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்.
- நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
- முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.