ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1987ம் ஆண்ட்ய் அக்டோபர் 21ம்தேதியன்று வெளியான திரைப்படம் மனிதன். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரூபிணி, ஸ்ரீவித்யா, ரகுவரன் மற்றும் பலரானோர் நடித்திருந்தனர்.
ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுதி இருந்தார். முக்கியமாக படத்தின் டைட்டிலின் புகழ் பாடும் மனிதன் மனிதன் எவன் தான் மனிதன் பாடல் மிக புகழ்பெற்ற பாடலாகும்.
வழக்கமாக ஏவிஎம் படங்களுக்கு அந்த காலக்கட்டத்தில் இளையராஜா இசையமைப்பது வழக்கம். சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு என பல வெற்றிப்படங்களை ஏவிஎம் இளையராஜா கூட்டணியில் காணலாம்..
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை இப்படத்துக்கு சந்திரபோஸ் இசையமைத்தார் அதன் பிறகு தொடர்ந்து பல ஏவிஎம் படங்களுக்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.
1987ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம். அந்த நேரத்தில் ரஜினியின் மனிதன் படத்துக்கு போட்டியாக கமலின் நாயகன் படம் வந்து இரண்டும் சக்கை போடு போட்டது.
மனிதன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் என்ற ஓப்பனிங் பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடலாகும். நேற்றுடன் மனிதன் படம் வந்து 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒரு பக்கம் ரஜினி ரசிகர்களும், ஒரு பக்கம் கமல் ரசிகர்களும் நேற்றுடன் 33 வருடங்களை கடந்த நாயகன், மனிதன் இரண்டு படங்களுக்கும் வாழ்த்துக்களை வழங்கி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

