தமிழில் வந்த வித்தியாசமான கதைகள் தொகுப்புவில் இன்று நாம் பார்க்க இருக்கும் திரைப்படம், கடந்த 1984ல் அப்போதைய பிரபல தயாரிப்பாளர் எஸ்.என்.எஸ் பெருமாள் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படமான 24 மணி நேரம்.
இப்படத்தை பிரபல இயக்குனர் மணிவண்ணன் இயக்கி இருந்தார். மணிவண்ணன் சஸ்பென்ஸ் படங்கள் இயக்குவதில் வல்லவர் அதற்கு முன்பு நூறாவது நாள் படத்தை வெற்றிகரமாக இயக்கி பட்டி தொட்டியெல்லாம் தெரிந்த இயக்குனர் ஆக இருந்தார்.
மணிவண்ணன் சத்யராஜ் கூட்டணி இப்படத்தில் வலுப்பெற்றது என சொல்லலாம். சத்யராஜ் பல படங்களில் வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தாலும் சத்யராஜ் வில்லனாக நடித்த படங்களில் இது மிக முக்கியமான படம் என சொல்லலாம். இதற்கு பின் சத்யராஜுக்கு வில்லன் வாய்ப்பாக வந்து குவிந்து இருக்கலாம் அந்த அளவு இந்த படத்தில் எக்ஸ் டபிள்யூ ராமரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே என்று வில்லத்தனமாக வசனம் பேசினார்.
பெண்கள் மீது தொடர் பாலியல் தாக்குதல் நடத்தி கொலை செய்து வரும் சமூகத்தின் பெரிய மனிதனான சத்யராஜை , அவரால் பாதிக்கப்பட்டு தன் மனைவியை இழந்து வீண் பழி சுமந்து ஜெயிலில் வாடி வரும் மோகன், ஜெயிலில் இருந்து தப்பித்து வந்து 24 மணி நேரத்தில் பழி வாங்குவதே கதை.
24 மணி நேரத்திற்குள் பல இடங்களில் சத்யாரஜை கொல்வதற்காக பின் தொடரும் மோகன் தொடர்ந்து தோல்வி அடைகிறார் இறுதியில் வெல்கிறார்.
இப்படியொரு வித்தியாசமான கதைக்கு தனது பின்னணி இசையின் மூலம் மெருகேற்றி இருந்தார் இளையராஜா. படத்தின் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை இல்லை என்றால் இந்த படமே இல்லை எனலாம். இளையராஜாவின் இசைதான் படத்தின் பிரதான பலமாக இருந்தது.
மோகன், நளினி, சத்யராஜ், செந்தில் மற்றும் பலரானோர் நடித்து இருந்த சீட்டின் நுனிக்கே நம்மை வரவைக்கும் த்ரில்லர் படமிது.

