கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக, 500 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதாமல் தஙழவிப்பிற்கு ஆளாகினர்.
மருத்துவ படிப்புக்கான, பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று (மே 5) நாடு முழுவதும் நடந்தது. இதில் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், கர்நாடகா ஹூப்பள்ளி நகரில் இருந்து மைசூர் செல்லும் ஹம்பி எக்ஸ்பிரஸ், தினமும் மாலை 6.20 மணிக்கு ஹூப்பள்ளியில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.10க்கு பெங்களூர் நகரை அடையும். இந்த ரயிலில் நேற்று முன்தினம் 500 மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பெங்களூர் கல்லூரிகளில் மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 6.10 மணிக்கு வரவேண்டிய ஹூப்பள்ளி எக்ஸ்பிரஸ், மதியம் 2.30 மணிக்கு வந்தடைந்தது. ஆனால், நீட் தேர்வு மையங்களில் மாணவர்கள் 1.30 மணிக்குள் இருந்திருக்க வேண்டும்.
அதனால், 500 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ரயிலில் வரும்போதே சில மாணவர்கள், மத்திய அமைச்சர்கள் சிலருக்கு, ட்விட்டரில் தகவல் தெரிவித்தனர். ரயில் தாமதமாக வருவதால், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்குள் செல்ல இயலாது. அதனால், சிறப்பு அனுமதி அளித்து, தேர்வு எழுத அனுமிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், எந்த அமைச்சரிடமும் இருந்து பதில் வரவில்லை.
இதனால், மாணவர்கள் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் தேர்வு எழுத முடியாமல் திரும்பி சென்றனர்.