Published
1 year agoon
வெற்றி தரும் வெள்ளெருக்கு விநாயகர்..!!
எருக்கன்செடி குடும்பத்தை சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர். சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதுமாக ஈர்க்கும் சக்தி படைத்தது எருக்கன்செடி இலை.
எருக்கன்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.
வெள்ளெருக்கு விநாயகர் :
வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த செடியே சிலை வடிக்க உகந்தது. அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம்.
வெள்ளெருக்கு வேருக்கு தெய்வீக சக்தியுள்ளது. எனவே, இந்த வேரை பயன்படுத்தி வடிக்கப்படும் சிலையும் மிகுந்த சக்தி வாய்ந்ததாகும். வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ ஒரு சுத்தமான இடத்தில் வெள்ளெருக்கு விநாயகரை வைத்து வழிபடலாம்.
இவ்வாறு வழிபாடு செய்பவருக்கு செல்வம், செல்வாக்கு, பெருமை கூடும். தன ஆகர்ஷன சக்தியை அள்ளிக்கொடுக்கக்கூடிய வல்லமையானது இந்த வெள்ளெருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது.
வழிபடும் முறை :
வெள்ளெருக்கு பிள்ளையாரை புதியதாக வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில் அரைத்த மஞ்சள் கலவையை தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்கவும்.
இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்துவிட்டோம். இனி, அவரவர் விருப்பப்படி தூப, தீப, நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
வெள்ளெருக்கு விநாயகர் தரும் பலன்கள் :
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர்வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமையை உணரலாம்.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த நாட்கள். அன்றைய தினம் செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்கினால் மிகச்சிறப்பு.
சுக்கில சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி வணங்கினால் வெற்றி நிச்சயம்.