பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதில்,
மொத்தம் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடக்கவுள்ளது. தமிழகத்தில், 14 மாவட்டங்களில் நீட் தேர்வு
நடைபெறவுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாமக்கல், சேலம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 14 இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி, உருது, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம் ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
விதிமுறைகள் :
நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே தேர்வு மையம் திறக்கப்படும். மாணவர்கள் 1.15 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். 1.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை.
1.30 மணி முதல் 1.45 மணிவரை, தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் ஹால்டிக்கெட் பரிசீலனை நடைபெறும். ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் எந்த காரணத்தை கொண்டும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அனுமதியில்லா பொருட்கள் :
தேர்வு எழுத பால்பாய்ன்ட் பேனா, தேர்வு மையத்தில் வழங்கப்படும். பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை. மேலும்,மொபைல் ஃபோன், பேஜர், புளூடூத், பென்ட்ரைவ், கடிகாரம், கேமரா, கைப்பை, காதணி, வளையல்களுக்கு அனுமதி இல்லை.
ஆடை கட்டுப்பாடு :
மெல்லிய ஆடைகளை அணிய வேண்டும். அறை கை ஆடைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. முழுக்கை ஆடை அணியக்கூடாது. தேர்வு மையத்திற்குள் ஷூ போட்டு செல்ல அனுமதி இல்லை. செருப்பு தான் அணிந்திருக்க வேண்டும், அதுவும் ஹீல்ஸ் இருக்க கூடாது.முழு ஆடைஅணிந்து வரும் இஸ்லாமிய பெண்கள், தேர்வு அறைக்குள் 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்று, ஆசிரியர்களின் சோதனைக்கு உள்ளாக வேண்டும்.