தமிழக மக்கள் தவறு செய்துவிட்டனர் – தமிழிசை பேட்டி

327
தமிழக மக்கள் தவறு செய்துவிட்டனர்

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தவறு செய்துவிட்டனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடந்தது. இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், தற்போதுள்ள நிலவரப்படி பாஜக 343 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 93 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதர கட்சிகள் 106 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

ஆட்சியில் அமர 272 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில் 343 தொகுதியில் பாஜக முன்னணியில் இருப்பதன் மூலம் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் இந்த தேர்தல் படுதோல்வியை அடைந்துள்ளது.

ஆனால், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் மண்ணை கவ்வியுள்ளனர். கன்னியாகுமாரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் என 5 பேரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இவர்களின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை  ‘தமிழக மக்கள் தவறு செய்து விட்டனர். ஊழலே செய்யாத பாஜகவிற்கு வாக்களிக்க தவறி விட்டனர்.  தமிழக மக்கள் ஒரே மாதிரி வாக்களித்திருப்பது வியப்பாக உள்ளது. பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்பதை மக்கள் உணர்வார்கள். தமிழக மக்களிடமிருந்து ஏன்  வாக்குகளை பெற முடியவில்லை என ஆத்ம பரிசோதனை செய்யவுள்ளோம். மக்கள் நம்பிக்கையை பெற கடின உழைப்பை பாஜக மேற்கொண்டது. ஆனால், அந்த நம்பிக்கையை பெறமுடியவில்லை. தமிழகத்தில் பொய் பரப்புரை எடுபட்டுவிட்டதோ என்கிற கவலை ஏற்பட்டிருக்கிறது” என அவர் பேசியுள்ளார்.

பாருங்க:  நீட் தேர்வை ரத்து செய்ய எங்களுக்கு தெரியும்- உதயநிதி