சென்னையில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களை பாதுகாப்பாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து ஜார்க்கண்ட்டில் இருந்து ஒரு ரயில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. இந்நிலையில் சென்னை அருகே பல்லாவரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதே போல கிண்டி தொழில் பூங்காவிலும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் பொது இடத்தில் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.