Published
1 year agoon
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பலத்த தோல்வியை தழுவியது. ஒரு இடத்திலும் கமல்ஹாசனின் கட்சி வெற்றி பெறாத நிலையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை
உயிரே உறவே தமிழே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்.
நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக உழைத்த கட்சியின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியைத் தொடருங்கள்.
உங்களை வெற்றி பெறச் செய்யாததை நினைத்து வருந்துமளவிற்குச் சேவையாற்றுங்கள். நாம் அரசியலுக்கு வந்தது மக்கள் பணி செய்வதற்குத்தான்.
வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2000 முதல் ரூ.8000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது.
அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாமல் தடுமாறியபோது நேர்மை அரசியலுக்கு இயன்றதைத் தாருங்களென மக்களிடமே கோரிக்கை விடுத்தோம்.
தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.