cinema news
‘வர்மா’ படம் எங்களுக்கு பிடிக்கவில்லை – டிராப் செய்த தயாரிப்பு நிறுவனம்!
பாலா இயக்கிய வர்மா படம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் அப்படத்தை டிராப் செய்வதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜீன் ரெட்டி’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. தமிழில் நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து, பாலா இயக்க ‘வர்மா’ என்கிற பெயரில் இப்படம் உருவானது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தை கை விடுவதாக இப்படத்தை தயாரித்த இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி 2019 ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்
இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.