புதுமுகங்கள் இணைந்து திரையில் மல்லுக்கட்ட தயாராகி வரும் “பனை” படத்தின் விழாவிற்கு வைரமுத்து சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். எப்பவும் போல படத்தையும், படக்குழுவையும் புகழ்ந்து பேசியே தனது பேச்சை துவங்கினார் வைரமுத்து ரசிக்க வைக்கும் அவரது வார்த்தை உச்சரிப்போடு.

மெதுவாக இன்றைய தமிழ் சினிமாவின் நிலையை பற்றி பேசத்துவங்கியவர் நேரடி குற்றச்சாட்டாக வைத்தார் படங்களுக்கு பெயர்களை வித்தியாசமாக வைக்கும் இயக்குனர்கள் மீது. வாய்ச்சொல்லாலே, வாள் வீச்சும் நடத்திவிட்டார் மேடையில். தமிழில் வார்த்தைகளுக்கா பஞ்சம் எனசொல்லி.
மொழிகளில் தனிச்சிறப்பு கொண்டது தமிழ் மொழி . இப்படிப்பட்ட ஒரு உன்னத மொழியில் படத்தை எடுக்கும் இயக்குனர்கள் தங்களது படங்களுக்கு வைக்கும் பெயர்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல் சில படங்களின் பெயர்களை கேட்டாலே, அது தனக்கு கோவத்தை வரவழைத்து விடுவதாகவும். அதே போல சில படங்களின் பெயர்களை வெளியில் சொல்லவே தனக்கு வெட்கமாக இருப்பதாகவும் தனது ஆழ் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.
தனது படங்களில் தான் எழுதும் பாடல்வரிகளில் தமிழ் இலக்கணம் மாறாமல் அனைத்தையும் செவ்வனவே எழுதி கொடுப்பவர் வைரமுத்து.
அவர் மேடையில் இப்படி பேசியது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் அவர் சொன்னது சரியெனத்தான் சொல்லும் படியாகத்தான் சில படத்தின் பெயர்கள் இருந்ததாக சொல்லப்பட்டது.
எந்த சொல்லை எடுத்தாலும் அதற்கு ஒரு விளக்கமும். ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு என கொண்டிருக்கும் தமிழ் மொழியை ஆராய்ந்தால் படங்களுக்கு பெயரிட வேண்டும் என்றார்.
அப்படி நல்ல பெயர்களை வைத்தால் படம் பார்க்கும் பாமரன் ரசிப்பார், விவசாயி ரசித்து மகிழ்வார். இப்படி அது பல தரப்பட்ட மக்களுக்கும் பிடித்தமான ஒன்றாக மாறும் என்பதால் அதனை செய்ய இயக்குனர்கள் முன்வர வேண்டும் என சொல்லியிருந்தார்.