Latest News
அது மக்களாட்சியின் சின்னம்…தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக திமுக…தமிழிசை செளந்தராஜன் சாடல்…
நடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து சர்ச்சை கிளம்பி வருகிறது. அதனை அகற்றும் படி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களும் எழத்துவங்கியுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. சவுத்திரியின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுனராகவும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனராகவும் இருந்தவர் தமிழிசை செளந்தரராஜன்.
இவர் பா.ஜ.க.வின் தமிழக முன்னாள் தலைவராக இருந்து வந்திருக்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தனது ஆளுனர் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தமிழகத்தை சார்ந்த எம்.பி.களையும் சாடியுள்ளார்.
‘செங்கோல் எனபது கொடுங்கோலின் சின்னம் கிடையாது’, ‘செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம்’ எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை.
இது தமிழ் மண்ணின் நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கு ஆன குறியீடு தான் செங்கோல். ஆக பாராளுமன்றமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரத பிரதமர் அதை நிறுவினார்.
கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும், புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.
அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று’ என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.