“கிழக்கு வாசல்” படத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து அதே போல கிராமத்து கதையை மையமாக வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கின்ற ஆசையில் இருந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். கதைக்கு நாயகனாக விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு அவரிடம் சம்மதம் கேட்பதற்காக சந்திக்க சென்று இருக்கிறார்.
இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்தும் நெருக்கமான தோழர்கள் என்பது உலகமே அறிந்தது தான். விஜயகாந்தை நீ, போ, வா என ஒருமையில் பேசக்கூடிய அளவில் தான் இருவருக்கும் இடையான நட்பு இருந்தது. ஆர்.வி.உதயகுமார் சொன்ன கதையைக் கேட்டு இப்ராஹிம் ராவுத்தாரோ இவர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கண்டம் விட்டு கண்டம் தாண்டிக்கிட்டு இருக்குராரு. ரோப் கட்டிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிக்கிட்டு இருக்காரு . இவரு கிட்ட போய் வேஷ்டி, துண்டை எல்லாம் கட்டிட்டு வரச்சொன்னா ரசிகர்கள ஏத்துக்குவாங்களா? என கேட்டிருக்கிறார்.
அதோடு இப்பொ விஜயகாந்த் போயிட்டு இருக்கிற பாதையில இருந்து இது மாறுவது மாதிரி ஆகிவிடுமே என சொல்லியிருக்கிரார். அதற்கு உதயகுமாரோ இந்த படம் நல்ல ஹிட் ஆகும் என ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டாராம்.
அதோடு ஆர்.வி. உதயக்குமார் கதையை மேலோட்டமாக மட்டுமே சொன்னாராம். ஊரில் மிக முக்கியமான புள்ளி. இவரைக்கண்டால் ஊரே எழுந்து நின்று மரியாதை கொடுக்கும். அவர் ஊருக்காரர்களுக்கு முன் தலை குனிகிறார். அதற்கு காரணம் என்ன? இதனை மட்டும் தான் சொன்னாறாம். படத்தில் விஜயகாந்த் நடிக்க தூங்கிய பின்னரே கதையை தெளிவாக எடுத்து சொன்னாராம். அப்படி உருவான படம் தான் சின்ன கவுண்டர்.