“சுட்டபழம்” படத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மோகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார் “ஹரா” படத்தில். இன்று வெளியாகி இருக்கிறது “ஹரா”. வெள்ளி விழா நாயகர்கள் இப்போது மீண்டும் வரிசை கட்டி வரத்துவங்கியுள்ளனர் தமிழ் சினிமாவில் என்றே சொல்லலாம்.
“மேதை”க்கு பிறகு “சாமானியன்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் ராமராஜன். அதே போல “ஹரா”வில் மோகன்.

தனது மகளின் இறப்புக்கு காரணனமானவர்கள் யார்?, அவர்களை எப்படி பழிவாங்குகிறார் மோகன், இவர் மீது போலீஸின் மீதான பார்வை எப்படிப்பட்டது. இவரது பழிவாங்கும் செயலால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் இதுவே கதை. பாசம் கொண்ட ஆக்ரோஷமான தந்தையாக மோகன் நடித்திருக்கிறார்.
அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள் “ஹரா”வில் என்று தான் சொல்ல வேண்டும் போல. சரி படத்தை கொண்டு போன விதமாவத்திலாவது புதுமை இருக்கிறதா என பார்த்தால் அதுவும் பாழைடைந்த பழைய பங்களாவாகத்தான் இருக்கிறது.
தனது படங்களில் சண்டை காட்சிளை குறைவாக கொண்டு நடித்தவர் மோகன். “ஹரா” படத்தின் ரசிகர்களை கவர அவரது கையில் இருந்த ஆஸ்தான ஆயுதமான மைக்கை பிடிங்கி விட்டு இயக்குனர் விஜய் ஸ்ரீஜி துப்பாக்கியை கொடுத்துள்ளார்.
மோகன் படங்கள் என்றாலே பாடல்கள் முக்கியத்துவம் பெறும். “ஹரா” பாடல்கள் ரசாந்த் அர்வின் இசையில் கொஞ்சம் ஓ.கே. தானாம். ஆனால் பின்னனி இசை பக்கா பொருத்தம்.
கோவை மோகன் ராஜ் தயாரிப்பில் சந்திரஹாசன், அனுமோள், யோகிபாபு, சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன், கோபி என பலரும் நடித்துள்ளனர்.
பழைய அழகின் தோற்றத்தில் தான் இன்னும் இருக்கிறார் மோகன். நடித்துள்ள விதத்தில் தான் மாற்றமே தவிர கதையிலோ, திரைக்கதையிலோ இல்லை. மோகனை திரையில் பார்த்து நாளாகி விட்டதே என நினைத்த அவரது ரசிகர்களுக்கான படம் தான் இது. மோகனை மட்டுமே தான் ரசிக்க முடியும் வேறு எதுவும் சொல்லும் அளவில் இல்லை படத்தில்.
ரீ-என்ட்ரி கொடுக்க நினைத்த மோகன் கதை தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செய்திருக்கலாம். பார்த்து சலித்து போன கதையில் நடித்ததற்கு பதிலாக பழைய படி இளையாராவை கூப்பிட்டு 5 பாடல்களை போடச்சொல்லி மைக்கை கையில் எடுத்திருக்கலாம் மோகன்.
“ஹரா” மொத்தத்தில் ஹேப்பி (happy) டு (to) சீ (see) மோகன் (mohan) அகெய்ன்(again) மட்டும் தான்.