cinema news
தங்க வேட்டையாடப்போகிறாரா தலைவர்?…கமல் ஆரம்பித்ததை முடிக்கப்போகிறாரா ரஜினி?……
“வேட்டையன்” வேலைகள் ஒரு புறம் வேகமாக நடந்து கொண்டிருக்க, திடீரென “கூலி “யாக மாறியுள்ளார். “தீ”, “உழைப்பாளி” படங்களுக்கு பிறகு தற்போது பெயரில் “கூலி”யாகியுள்ளார் ரஜினி. லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ், ரஜினி கூட்டணியின் அடுத்த படம் தான் “கூலி”. சமீபத்தில் தான் பெயர் அறிவிப்பு வந்தது. மறுநிமிடமே பற்றிக்கொண்டது எதிர்பார்ப்பு.
போதை கலாச்சாரம் குறித்து தனது முந்தைய படங்களில் சொல்லியிருந்த லோகி, ரஜினியை எப்படி கையாளப்போகிறார் என காத்து நிற்கிறது ரசிகர் கூட்டம். “லியோ”விஜய், “விக்ரம்” கமல் இவர்களை பற்றி சமீபத்தில் தான் மிக பிரம்மாண்டமாக பேச வைத்திருந்தார் லோகேஷ்.
“கூலி” படத்தின் டைட்டில் டீசரை பார்த்தவர்களின் எண்ணம் ரஜினிக்கு வயது என ஒன்று உண்டா?, கிடையாதா? என்பது மட்டும் தான். “நினைத்தாலே இனிக்கும்” படத்தின் பாடலை இங்கே ‘பஞ்ச்’ டயலாக பேசியிருந்தார் ரஜினி. இளமை, சுறுசுறுப்பும, வேகம் அன்று எப்படி இருந்ததோ அதே போல தான் இன்றும் இருக்கிறது அவரின் ஸ்டைலோடு.
டீசரில் ரஜினி சன்டையிடும் இடத்தை சுற்றி தங்க நகைகள் குவியலாக காட்டப்பட்டிருந்தது. இதனால் படம் தங்கத்தை மையமாக வைத்து தான் இருக்குமா?. புதையலை தேடப்போகின்றாரா ரஜினி? அல்லது தங்கக்கடத்தல் மையப்படப்போகிறதா? என யோசனை செல்லத்துவங்கியுள்ளது ரசிகர்களுக்கு.
“லியோ”‘படத்தில் ‘ப்ளடீ ஸ்வீட்’ என்ற வார்த்தையும், “விக்ரம்” படத்தில் கமல் ‘ஆரம்பிக்கலாமா?’ என கேட்டிருப்பதையும் டீசரில் காட்டியிருந்தார். அதே போல “கூலி”யில் ‘முடிச்சிடலாமா’ என ரஜினி கேட்டிருக்கிறார்.
இது நிச்சயமாக ஆக்சன் படம் தான் என்றும், இதுவரை ரஜினி செய்த ஆக்சனில் இருந்து மாறுபட்டிருக்கும் என லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சொல்லியிருந்தார். அவர் சொன்னபடியே படம் அமைந்தால் ரஜினி ரசிகர்களுக்கு அது விருந்தாதாகத்தான் அமையும்.