காஞ்சனா 3

காஞ்சனா 3 படம் பார்க்க சென்ற வாலிபர் அடித்துக் கொலை…

ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படத்தை பார்க்க சென்ற ரசிகர் தியேட்டரில் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா 3 சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ. 100 கோடி வசூலை  தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரில் வசிக்கும் தமிழ் வாலிபர் பரணிதரன் இப்படத்தை பார்ப்பதற்காக கடந்த 10ம் தேதி செயிண்ட் ஜான்ஸ் சாலையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது படம் தொடங்கிவிட்டதால் அவசர அவசரமாக பைக்கை பார்க் செய்துவிட்டு சென்றார். அவரை மறித்து தியேட்டர் ஊழியர் செல்வராஜ், ரூ. 10 செலுத்தி டோக்கன் வாங்கிவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். தன்னிடம் ரூ. 10 இல்லை. படம் முடிந்து வந்து தருகிறேன் என பரணிதரன் கூறியுள்ளார். இதை செல்வராஜ் ஏற்கவில்லை. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, செல்வராஜை பரணிதரன் தாக்கியதாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த மற்றொரு ஊழியர் சேகரும், செல்வராஜும் சேர்ந்து பரணிதரனை மறைவான இடத்துக்கு இழுத்து சென்று அடித்து உதைத்தனர். இதில் பரணிதரன் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட ஒரு நபர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்த பரணிதரனை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, பரணிதரனை தாக்கிய செல்வராஜை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான சேகரை போலீசார் தேடி வருகின்றனர்.