ஊர்வசி, கலாரஞ்சனி, கல்பனா சகோதரிகள் தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர்கள். தமிழ் மாத்திரம் அல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாவிலும் முத்திரையை பதித்தவர்கள். இவர்களில் ஊர்வசி மட்டும் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாக புகழடைந்தார். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இவர்கள்.
“முந்தானை முடிச்சு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஊர்வசி. அந்த படத்தில் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பலராலும் பாராட்டப்பட்டவர். முருங்கைக்காய் என்று சொன்னாலே ஒரு காலததில் “முந்தானை முடிச்சு” படம் தான் நினைவில் வரும். படம் அந்த அளவு பாப்புலாரானது.
குழந்தைக்கு தகப்பனாக, மனைவியை இழந்த பள்ளிக்கூட ஆசிரியராக கதாநாயகன் பாக்யராஜ் நடித்திருந்தார். அவரின் மீது முரட்டு தனமான காதல் கொண்டு, பொய் சொல்லி பாக்யராஜை திருமணம் முடிக்கும் வேஷத்தில் நடித்திருந்தார் ஊர்வசி. தனது முதல் படம் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், குழந்தைக்கு தாயாக நடித்திருப்பார்.
“முந்தானை முடிச்சு” படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது கலாரஞ்சினி தானாம். அவர் பயங்கர பிஸியாக இருந்திருக்கிறார். அதனால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதாம்.

படத்தை பற்றி பேச பாக்யராஜ் வந்த நேரத்தில் ஊர்வசியை பார்த்திருக்கிறார். துருதுரு பெண்ணாக இருக்கும் இவர் நடித்தார் நன்றாக இருக்கும் என நினைக்க, கடைசியில் படத்தின் ஹீரோயின் ஆனார் ஊர்வசி.
முதல் நாள் படப்பிடிப்பிற்கு ஊர்வசியை, கலாரஞ்சனி தான் அழைத்து சென்றாராம். பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தாராம் ஊர்வசி அப்போது.
ஷூட்டிங்கிற்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டியது இருந்ததால் தான் போட்டிருந்த ஸ்கூல் யூனிஃபார்மோடு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போனாராம் ஊர்வசி.
பள்ளி செல்லும் வயதிலேயே கதாநாயகியான ஊர்வசி பாக்யராஜின் குழந்தைக்கு தாயாக நடித்து ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
இந்த இளம் வயதில் இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்திருக்கிறாரே என சோகமாக பேசப்பட்டாலும் அந்த வேடம் தான் இவருக்கு பெரும் பெயரை வாங்கிக்கொடுத்தது.