Latest News
பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா மரணம்… திரையுலகினர் இரங்கல்…!
பழம்பெரும் நடிகையான சி.ஐ.டி சகுந்தலா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் சிஐடி சகுந்தலா. இவர் பெங்களூரில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றா.ர் நேற்று மாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள்.
சிகிச்சை பலனில்லாமல் சிஐடி சகுந்தலா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இன்று மாலை பெங்களூருவில் அவரது வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றது. இவரின் மறைவுக்கு ஏகப்பட்ட திரை பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். மரணமடைந்த சிஐடி சகுந்தலாவுக்கு செல்வி என்ற மகள் இருக்கிறார்.
சேலத்தைச் சேர்ந்த சி.ஐ.டி சகுந்தலா ஆரம்ப காலகட்டத்தில் ஏகப்பட்ட நாடகங்களில் நடித்தவர். 1960 ஆண்டு கைது கண்ணாயிரம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக நடன கலைஞனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். 1970 இல் சிஐடி சங்கர் என்ற திரைப்படத்தில் நடித்து மிகப் பிரபலமானார். அன்று முதல் சிஐடி சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார்.
தமிழில் படிக்காத மேதை, நினைவில் நின்றவன், ஒளி விளக்கு, என் அண்ணன், இதயவீணை, ராஜ ராஜ சோழன், தேடி வந்த லட்சுமி, பாரத விலாஸ், தெய்வ பிறவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
நடன கலைஞனாக அறிமுகமான இவர் பின்னர் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் கதாநாயகியாக சேர்ந்து நடித்திருக்கின்றார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த இவர் 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி விட்டார். அதன் பிறகு டிவி சீரியல்களில் நடித்து வந்தார். குடும்பம், சொந்தம், வாழ்க்கை, கஸ்தூரி, பூவிலங்கு, கல்யாண பரிசு, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருக்கின்றார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.