ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை பள்ளிக்கல்வி துறை அரசிடம் ஒப்படைக்கவுள்ளது.
பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பணிக்கு திரும்பும் படி அரசு கோரிக்கை வைத்தும் அவர்கள் அதை ஏற்கவில்லை. அதன்பின், முதல்வரின் கோரிக்கையை ஏற்று அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை பள்ளிக்கல்வி துறையின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தொடக்கக்கல்வி துறையில் ஒரு லட்சம் ஆசிரியர்களும், பள்ளிக்கல்வியில் 80 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக ராமேஸ்வரமுருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் பெறப்பட்டு அரசிடம் ஒப்படைக்க இருக்கிறது.
ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முயற்சி செய்து வரும் நிலையில், கல்வித்துறை எடுத்து வரும் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.