தற்போதுள்ள பாடதிட்டத்தின்படி 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு கிடையாது. ஆனால், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு தொடந்து கூறி வருகிறது. ஆனால், தமிழக அரசு இதை ஏற்கவில்லை.
இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், அதில், இந்த ஆண்டு முதலே 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியானது. இந்த செய்தி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு கிடையாது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் பொதுத்தேர்வு நடைபெறாது. எனவே, மாணவர்கள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை” என தெரிவித்தார்.