Latest News
கூகுள் மேப் சொன்ன வழியில் சென்ற போது ஏற்பட்ட விபத்து… 2 பேர் உயிரிழப்பு…!
கூகுள் மேப் சொன்ன வழியில் சென்ற போது கார் விபத்துக்குள்ளாகி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜேம்ஸ் ஜார் மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே.
இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு வந்திருக்கிறார்கள். நேற்று இரவு கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமரகோம் பகுதியிலிருந்து எர்ணாகுளத்திற்கு வாடகை காரில் சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது கைப்புலமுட்டு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று அவர்களது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதனால் அவர்களது கார் தண்ணீரில் மூழ்கியது. காருக்குள் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தார்கள். மேலும் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டார்கள். அவர்களின் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்பதற்கு முயற்சி செய்தார்கள்.
இருப்பினும் ஆற்றுக்குள் கார் முழுவதுமாக மூழ்கியது. உள்ளூர் மக்கள் ஆற்றுக்குள் இறங்கி காருக்குள் சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சி செய்தபோதும் முடியவில்லை. இது தொடர்பாக தீயணைப்பு மற்றும் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றுக்குள் மூழ்கி இருந்த காரை மீட்டெடுத்தனர்.
காருக்குள் மயங்கிய நிலையில் இருந்தால் ஜேம்ஸ் ஜார்ஜ் மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதை தொடர்ந்து இருவரது உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கூகுள் மேப்பை பார்த்தபடி சென்றிருக்கலாம் என்றும், அது தவறான வழியை காட்டியதன் காரணமாக ஆற்றுக்குள் கவிழ்ந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள்.