மும்பையில் பெய்து வரும் பலத்தை மழை காரணமாக நான்கு மாடி கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மும்பையில் பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக பல நகரில் பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் விடாமல் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி இருக்கின்றது. கடந்த மூன்று நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக காலை 11 மணியளவில் கிரவுண்ட் ரோடு ரயில் நிலையம் அருகே உள்ள பழமையான நான்கு மாடி கட்டிடத்தின் பால்கனி பகுதி இடிந்து விழுந்தது .
மூன்றாவது மாடியில் பால்கனியில் சில பகுதிகள் முழுமையாக இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்தில் சிக்கியவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்து வந்தனர். கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இருந்ததால் பதற்றத்தில் உதவிக்காக வேண்டி காத்திருந்தனர். அப்போது பால்கனி இடிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டிடத்தில் சிக்கி தவித்த 20 பேரை தீயணைப்பு படையினர் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள்.