Latest News
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த காதலி… கரம் பிடிக்க காத்திருந்த வாலிபர்… கடைசியில் நேர்ந்த சோகம்…!
வயநாட்டின் நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தை இழந்த பெண் ஒருவரை மணம்முடிக்க காத்திருந்த வாலிபர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, மேப்பாடி, முண்டகை, பூஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தனர்.
மேலும் 100க்கும் மேற்பட்டவர்களின் கதி என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. பலர் தங்களது குடும்பத்தோடு உயிரிழந்து விட்டனர். பலர் குடும்பத்தில் உள்ள சில உறவுகளை இழந்து தனியாக தவிர்த்து வருகிறார்கள். சூரல்மலைப்பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண் இந்த நிலச்சரிவில் தனது தந்தை தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் ஒன்பது பேரை இழந்துவிட்டார்.
பணி நிமிர்ந்தம் காரணமாக இவர் கோழிக்கோட்டில் இருந்த நிலையில் நிலச்சரிவில் சிக்காமல் தப்பித்து விட்டார். தாய் தந்தை மற்றும் சகோதரி என அனைவரையும் இழந்த ஸ்ருதி அனாதையானார். நிவாரண முகாம்களில் தங்கி இருந்த அவருக்கு காதலன் ஜென்சன் ஆதரவாக இருந்து வந்தார். இந்த நிலச்சரிவில் சிக்கி ஸ்ருதியின் வீடு முழுவதுமாக இடிந்தது.
மேலும் ஸ்ருதியின் திருமணத்திற்காக அவரின் பெற்றோர்கள் சேர்த்து வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் பணம், 15 பவுன் நகை உள்ளிட்ட அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. உறவுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்து வந்த ஸ்ருதிக்கு காதலன் ஆதரவாக இருந்திருந்தார். தொடர்ந்து அவரை திருமணம் செய்ய காத்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நிலச்சரிவில் ஏற்பட்ட அவரது உறவினரின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மாத இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்கள். இந்நிலையில் சுருதி மற்றும் அவரின் தோழிகள் சிலருடன் ஜென்சன் வேனில் சுற்றுலா சென்றிருந்தார். வேனை ஜென்சன் தான் ஓட்டி சென்று இருக்கின்றார்.
அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து இந்த வேனின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காதலர் ஜென்சன் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் ஸ்ருதியும் படுகாயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்நிலையில் ஜென்சன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் 10 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு இப்படி அரங்கேறிய சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.