உலகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மழை வெயில் எதையும் பொருட்படுத்தாமல் மணி கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலில் ஆகஸ்ட் மாதமான இந்த மாதத்தில் இரண்டு நாட்கள் கருட சேவை நடக்கின்றது.
அதன்படி வருகிற 9-ம் தேதி கருட பஞ்சமி மற்றும் 19ஆம் தேதி ஆவணி மாத பௌர்ணமி ஆகிய நாட்களில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 9-ம் தேதி இரவு 7 மணி முதல் 9 மணி வரை தனது இஷ்ட வாகனமான கருடத்தின் மீது திருமண வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வருவார்.
இதில் புதுமண தம்பதிகள் கலந்துகொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும். மேலும் கருடனைப் போல் வலிமையான மற்றும் நல்ல ஆளுமையுடன் இருக்கும் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது. அதையடுத்து 19ஆம் தேதி ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.
ஒரே மாதத்தில் இரண்டு கருட வாகன சேவை நடைபெற இருப்பதால் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் அறிவித்திருக்கின்றது. ஏழுமலையான் கோவிலில் நேற்று 75 ஆயிரத்து 356 பேர் தரிசனம் செய்திருக்கிறார்கள். இதில் 21,281 பேர் முடி காணிக்கை செய்திருக்கிறார்கள். உண்டியலில் மட்டும் 3.90 கோடி ரூபாய் வசூலாகி இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.











