தனது நண்பன் புது போன் வாங்கியதற்கு ட்ரீட் வைக்காத காரணத்தால் அவரை நண்பர்கள் சேர்ந்து குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
டெல்லியில் ஷகர்பூர் பகுதியில் 16 வயதான சிறுவன் புது போன் வாங்கி இருக்கின்றான். நேற்று மாலை சச்சின் என்ற சிறுவன் புது போன் வாங்கி அதனை நண்பர்களிடம் காட்டி இருக்கின்றான். போன் வாங்கியதற்கு ட்ரீட் வைக்க வேண்டும் என்று அவரின் மூன்று நண்பர்கள் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு சச்சின் மறுப்பு தெரிவித்து இருக்கின்றார்.
இதனால் நண்பர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சச்சினை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்கள். பின்பு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருக்கிறார்கள். அதில் 16 வயதுள்ள மூன்று சிறுவர்கள் அந்த சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து அந்த மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.