Latest News
சரக்கு கறி விருந்து…அதிர்ச்சி கொடுத்து நன்றி சொன்ன பா.ஜ.க. எம்.பி…
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எம்.பி.ஒருவர் பொது மக்களுக்கு மது வகைகளை வழங்கியும், கறி விருந்து கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சிகளும் எம்.பி.யின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அமைச்சர் குண்டுராவும் தனது கண்டனத்தை சொல்லியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி இதில் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில எம்.பி. ஒருவர் தன்னை வெற்றி பெறச்செய்த மக்களுக்கு மது பாட்டில்களையும், அசைவ உணவும் வழங்கியிருக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் கர்நாடக மாநிலம் சிக்கப்பல்லபூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார் பா.ஜ.க. வேட்பாளர் சுதாகர்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தனது வெற்றியை கொண்டாடும் விதாமாக பொது மக்களுக்கு மது பாட்டில்களை வழங்கியுள்ளார். நீண்ட வரிசையில் காத்து நின்று ‘குடி’மகன்கள் மது பாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த நபர்களுக்கு அசைவ வகை உணவுகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
அங்கே கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினரும் சரக்கு விநியோகிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் விதமான வீடியோ இப்போது வைரல் ஆக வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. கர்நாடக மாநில அமைச்சரான குண்டு ராவ் எம்.பி.யின் இந்த செயல் குறித்து கடுமையாக சாடியுள்ளார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். மது ஒழிப்பு விஷயத்தில் பா.ஜ.க. இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதை தெரிவிக்கும் விதமாக அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.