Latest News
நீட் தேர்வு பணக்காரர்களுக்கானது…குற்றம் சாட்டிய ராகுல்…நாடாளுமன்றத்தில் கடும் அமளி…
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். ஆட்சி அமைக்கப்பட்ட பிறகான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.
இன்றைய கூட்டத்தொடரின் போது பேசிய எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வின் மீது கடும் விமர்சனத்தை வைத்தார். நீட் தேர்வு விவகாரத்தில் சமீபத்தில் நடந்துள்ளதாக சொல்லப்படும் விஷயங்கள் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இந்த தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சட்டபேரவையில் தெரிவித்திருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு வலுத்து வருவதாகவும் சொல்லியிருந்தார். இந்நிலையில் இன்று நீட் குறித்து பேசிய ராகுலும் இந்த தேர்வு முறைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
நீட் தேர்வு ஏழைகளுக்கானது அல்ல, பணக்காரர்கள் மட்டுமே பயன்பெறும் விதமாகத் தான் இந்த தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். மாணவர்கள் நீட் தேர்வுக்காக தங்களை தயார் படுத்திக்கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது எனவும் சொன்னார். நீட் தவிர பல்வேறு கருத்துக்களை முன் வைத்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கோஷங்களை எழுப்பினர்.