national
ரூ.21 கோடி… திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு… அள்ளிக் கொடுத்த பஞ்சாப் தொழில் அதிபர்…!
பஞ்சாப்பை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு 21 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி இருக்கின்றார். உலகப் புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலில் மட்டும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அதுமட்டுமில்லாமல் உண்டியலிலும் கோடி கோடியாக வசூல் ஆகும். இந்நிலையில் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ் வி பிரதான அறக்கட்டளை அளித்து வருகின்றது.
உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகளை வழங்குவது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ரஜிந்தர் குப்தா, திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரதான அறக்கட்டளைக்கு 21 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கின்றார். அவரது குடும்பத்தினருடன் இந்த நன்கொடை காசோலையை திருப்பதி தேவஸ்தான அதிகாரியான வெங்காய சௌத்ரியிடம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.