national
போராட்டத்தை கைவிடுங்க… எங்களை நம்புங்க… டாக்டர்களுக்கு சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்…!
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர் ஜி கார் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு டாக்டர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கின்றது. இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பயிற்சி டாக்டர் படுகொலை தொடர்பான விரிவான அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் மேற்கு வங்க மாநிலமும் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை வரும் வியாழக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கொல்கத்தா மருத்துவமனை பிரச்சனை ஒரு பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த டாக்டர்களின் பிரச்சினை இது என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் குறித்து பேசிய நீதிபதிகள் தயவுசெய்து எங்களை நம்புங்கள், போராட்டத்தை கைவிடுங்கள், டாக்டர்களின் பாதுகாப்பு தேசிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும், எனவேதான் இந்த விவகாரத்தை நாங்கள் ஐகோர்ட் இடம் விடவில்லை. உங்கள் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.