national
வயநாடு நிலச்சரிவு… வரும் 10-ம் தேதி பிரதமர் மோடி கேரளா பயணம்…!
வயநாடு நிலச்சரிவில், கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சூரல்மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயினர். இந்த நிலச்சரிவில் 405க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
ஒரு வாரத்திற்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி, கேரளா முதல்வர் பினராய் விஜயன், மோகன் லால், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்நிலையில் கேரளா சார்பாக இந்த நிலச்சரிவை மாநில பேரிடராக அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி வயநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. அதன்படி நாளை மறுதினம் வருகிற பத்தாம் தேதி பிரதமர் மோடி வயநாடு செல்ல இருக்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்டு செல்லும் அவர் கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் செல்கின்றார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வயநாட்டுக்கு சென்று ஹெலிகாப்டரில் பறந்தபடியே நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் எனக் கூறப்படுகின்றது. பின்னர் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறுவார் எனவும் கூறப்படுகின்றது.
உயிர் பிழைத்தவர்கள் சிலருடன் உரையாடவும் இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. பிரதமரின் இந்த பயணத்தில் கேரள கவர்னர் ஆர் எஸ் முகமது கான், கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் ஆகியோரும் இணைவார்கள் என கூறப்படுகின்றது. இதற்காக முழு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இதே போல் மாநில எல்லையிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு வருகின்றது.