national
வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட கண்ணூர் வந்தார் பிரதமர் மோடி…!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக கண்ணூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி.
கேரள மாநிலத்தில் கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயினர். நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்திருக்கின்றது .
தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வயநாட்டுக்கு பிரதமர் மோடி இன்று செல்ல இருந்தார். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இருக்கின்றார் . அதன்படி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்ட நரேந்திர மோடி காலை 11 மணியளவில் கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்தடைவர் எனவும், ஹெலிகாப்டர் மூலமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கின்றார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக கிளம்பிய பிரதமர் மோடி கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை கேரளாவின் முதல் மந்திரி பினராய் விஜயன் மற்றும் கேரளா ஆளுநர் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பின்னர் முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் மோடி உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.