national
இனி மது விருந்துக்கு புதிய கட்டுப்பாடுகள்… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!
தெலுங்கானா மாநிலத்தில் மது விருந்து நடத்துவதற்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகின்றது. இதில் பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்த பொருள் கட்டுப்பாடு தனிப்பிரிவு மற்றும் போலீசார் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மது விருந்து என்ற பெயரில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் இதில் பாதிக்கப்படுவது தெரிய வந்திருக்கின்றது.
இதனால் தெலுங்கானா மாநிலத்தில் மது விருந்து நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 6 பாட்டில் மதுவுக்கு மேல் வாங்கி விருந்து வைத்தால் கட்டாயம் அந்த விருந்துக்கு அரசிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி மற்றும் மாலை 4 மணி என இரண்டு நேரங்களில் மட்டுமே மது விருந்து தொடங்கும் வகையில் நேர ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
மது விருந்து நடத்துபவர்கள் வீடு மற்றும் விடுதிகளில் ரூபாய் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி வாங்க வேண்டும். வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதிகள், ஹோட்டல்களில் மது விருந்து நடத்தினால் டிக்கெட் எண்ணிக்கை பொறுத்து கட்டணங்களை செலுத்தி முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும்.
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது. அனுமதியின்றி மது விருந்து நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இடத்தின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.