இனி கோவில்களில் நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயார் செய்யப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு எண்ணெய் மற்றும் மீன் கொழுப்பு எண்ணெய் சேர்க்கப்பட்டு தயார் செய்யப்பட்டதாக வெளியான அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கி இருக்கின்றது.
இதனால் தொடர்ந்து கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் என்ன பொருள்கள் சேர்க்கப்படுகின்றன என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இன்று தமிழகத்தில் பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக வதந்திகள் பதவி வந்த நிலையில் அதற்கு தமிழக அரசு சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு அரசின் நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அறநிலைத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகா அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதனால் கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்துமாறு அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. திருப்பதியில் கர்நாடகாவின் நந்தினி நெய் முன்னதாக அனுப்பப்பட்டு வந்தது. கடந்த 8 மாதங்களாக திருப்பதி தேவஸ்தானம் அதை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.





