இன்று காலை 11 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு 8.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி சாணக்கியபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று தங்கினார்.
இன்று காலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் அதனை தொடர்ந்து 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியும் முக ஸ்டாலினை இன்முகத்துடன் வரவேற்றார் . பின்னர் பிரதமருக்கு சால்வை அணிவித்து முதல்வர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.
தமிழ்நாட்டில் ரூ.63,426 கோடி செலவில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்ட பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின். இதற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி இன்னும் கிடைக்காததையும் கூறினார். இதையடுத்து மாநில அரசின் நிதியில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதையும் மத்திய அரசின் நிதியை விடுவிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் கல்விக் கொள்கைக்கான நிதியும் விடுவிக்கப்படாமல் இருப்பதை முதல்வர் மு க ஸ்டாலின் சுட்டிக்காட்டினார், தமிழகத்திற்கு இந்த நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட பல்வேறு பொது பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் பிரதமர் அலுவலக செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அவருடன் இருந்தனர்.