நேற்று முன் தினம் இரவு விளக்கு ஏற்றும் நிகழ்வின் போது துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிர் அணித் தலைவி மஞ்சு திவாரி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரையும் நேற்றிரவு 9 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற சொன்னார். அதன் படி மக்கள் விளக்குகளை ஏற்றினர். ஆனால் சில இடங்களில் விரும்பத் தகாத சில நிகழ்வுகளும் நடந்தன.
ஒரு சில இடங்களில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை சரியாகக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று விளக்குகளை எரிய விட, சில இடங்களில் தீபாவளிப் போன்று பட்டாசுகளை வெடித்தும் மக்கள் கொண்டாடினர். இந்நிலையில் வட இந்தியாவில் ஒரு வீட்டில் மொட்டை மாடியில் வைத்து வெடிகளை வெடிக்க எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்தது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்பது ஆறுதல் ஆக அமைந்தது. இதுபோன்ற சம்பவங்கள் சமூக இடைவெளியைக் குறைக்கும் விதமாக அமைய பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த செயல் கண்டனங்களை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்ராம்புர் மாவட்டத்தின் பாஜக மகளிரணி தலைவராக இருப்பவர் மஞ்சி திவாரி. இவர் கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று முன் தினம் இரவு துப்பாக்கியால் சுட்டு அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். அவரது செயலுக்கு கண்டனங்கள் எழுந்தை அடுத்து போலீஸார் அவர் மேல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக அவர் பதவியில் இருந்தும் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.