Latest News
நாட்டு பசுமாடுகள் இனி ‘ராஜமாதா’… மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிவிப்பு…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாட்டு பசுமாடுகளை ராஜமாதாவாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
மகாராஷ்டிரா மாநில அரசு நாட்டு பசு மாடுகளை ராஜமாதாவாக அறிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது ‘பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. வேதகாலத்தில் இருந்தே ஆன்மீகம் அறிவியல் மற்றும் ராணுவம் என அனைத்து துறைகளிலும் பசுக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கின்றது.
நம் நாட்டில் பல்வேறு வகையான மாடுகள் உள்ளன. ஆனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்து வருகின்றது. மாடுகளை விவசாயிகள் வளர்க்க வேண்டும் என்று அரசு ஊக்குவித்து வருகின்றது. விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் நம் உணவில் அதிக அளவு ஊட்டச்சத்தை பெற முடியும்.
சமூக பொருளாதார காரணிகளுடன் மத மற்றும் கலாச்சாரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை கருத்தில் கொண்டு நாட்டுப் பசுக்கள் ராஜமாதாவாக அறிவிக்கப்படுகின்றது என்று அதில் தெரிவித்திருந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கடுமையான பின்னடைவை சந்தித்தது.
இந்திய கூட்டணி அதிக வெற்றிகளை பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. அதை வைத்துக் கொண்டுதான் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. ஏனென்றால் இந்தியாவின் வட மாநிலங்களில் பசுக்கள் புனிதம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகின்றது. பசுவின் கோமியத்தை புனித நீராக மக்கள் பருகுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.