Connect with us

திருப்பதி லட்டு விவகாரம்… சந்திரபாபு நாயுடு இன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை…!

Latest News

திருப்பதி லட்டு விவகாரம்… சந்திரபாபு நாயுடு இன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை…!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு இன்று அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஆந்திராவில் மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இங்கு வழங்கப்படும் லட்டு உலக புகழ் பெற்றதாகும். 300 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த திருப்பதியில் லட்டுகள் ஆலயத்தின் அருகில் உள்ள பிரத்தியேகமான மடப்பள்ளியில் சுத்தமான நெய் மற்றும் பொருள்களால் தயாரித்து வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 முதல் 15 கோடி லட்டுகள் வரை திருப்பதி ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் இந்த லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்த்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை லட்டுகளில் கலந்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவே இந்த தகவலை வெளியிட்டது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தரமற்ற நிலையில் லட்டுக்களை தயாரித்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனித தன்மையை முந்தைய ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி சீரழித்து விட்டதாக குற்றச்சாட்டை வைத்திருந்தார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில் திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த ஆய்வு முடிவில் திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. திருப்பதியில் லட்டு தொடர்பாக விரிவான விளக்கம் தர ஆந்திரா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஆந்திர மாநில அரசு திருப்பதி லட்டுகள் தொடர்பாக விரிவான அறிக்கை தயாரிக்க முடிவு செய்திருக்கின்றது.

அதன்படி நேற்றும் இன்றும் அமராவதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வாங்கப்படும் நெய் குறித்து  தணிக்கை குழு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

More in Latest News

To Top