7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன் 24 வயதில் வக்கீலாக மாறி தன் வழக்கை தானே வாதாடிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேர்கர் என்ற நகரில் ஹர்ஸ் ராஜ் என்கின்ற 7 வயது சிறுவன் தந்தை மற்றும் உறவினர் முன்னிலையில் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்படுகின்றார். ஆக்ராவிலிருந்து கடத்திச் சென்ற கொள்ளையர்கள் அவனது பெற்றோர்களிடம் 55 லட்சம் பணத்தை கொடுத்தால் தான் சிறுவனை விடுவிப்போம் என்று கூறி மிரட்டி இருக்கிறார்கள்.
மேலும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடத்தை மாற்றி போலீசாருக்கு தண்ணி காட்டி இருக்கிறார்கள். சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என்று சிறுவனை அழைத்துக் கொண்டு கொள்ளையர்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். கடைசியாக 2007 அன்று மத்திய பிரதேசத்தில் சிவபுரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை போலீசார் பிடித்து சிறுவனை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தார்கள்.
இந்த கடத்தலில் தொடர்புடைய 14 பேரை அதுக்கடுத்த ஒரு வருடத்திற்குள்ளேயே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால் அவர்கள் மீது கடந்த 14 வருடமாக வழக்கு நடைபெற்று வந்தது. கடத்தப்பட்ட அந்த சிறுவன் தற்போது 24 வயதான இளைஞராக மாறி இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் வழக்கறிஞர் பட்டத்தையும் முடித்திருக்கின்றார்.
தனது கடத்தல் வழக்கில் இறுதி விசாரணையில் நீதிமன்றத்தில் தன் சார்பாக ஆஜரான ஹரிஷ் ராஜ் சரியாக 55 நிமிடங்கள் தனது இறுதி வாதத்தை கூறியிருந்தார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கின்றது. இதில் இருவர் வழக்கு நடக்கும்போதே உயிரிழந்தனர்.
மேலும் நால்வர் தகுந்த ஆதாரம் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர். கடந்த 2015 முதல் தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் பார்த்து பார்த்து அதனால் கவரப்பட்ட ஹரிஷ் ராஜ் 2022-ல் ஆக்ரா கல்லூரியில் பட்டம் படைத்து தனது கடத்தல் வழக்கை தானே வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.