national
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு… கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை…!
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் வேதனை தெரிவித்து இருக்கின்றார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கேரளாவின் வயநாடு பகுதிகளின் இன்று இரவு அதீத கன மழை பெய்தது. இந்த கனமழையால் இன்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடு உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது.
முண்டகை என்ற பகுதியைச் சேர்ந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தனித்தீவில் சிக்கியது போல் 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டரில் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இது ஒரு புறம் இருக்க பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அவர் பேசியதாவது “இது கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு. விமானப்படையின் இரண்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
30 பேரைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்து இருக்கிறார்கள். மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் 48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மண்ணில் புதைந்தும் எரிந்தும் 6 மின்மாறிகள் சேதம் அடைந்துள்ளன. 350 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. அரசின் மீட்பு நடவடிக்கைகள் முழுமை அடைய பாதிக்கப்பட்ட மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருக்கின்றார்.