national
5 மாத பெண் குழந்தையை கொன்ற கொடூர தாய்… கள்ளக்குறிச்சியில் கொடூர சம்பவம்…!
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ். இவர் செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலித்தொழிலாளியாக இருந்து வருகின்றார். இவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ராதிகா என்கின்ற 3 வயது குழந்தையும், லாவண்யா என்கின்ற 5 மாத கைக்கு குழந்தையும் இருந்துள்ளது. மணிராஜ் வேறு ஊர்களில் தங்கி ஆடுகளை மேய்த்து வருகின்றார்.
இதனால் ராஜேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளுடன் கடலூர் மாவட்டம் வடலூரில் வசித்து வருகிறார் . ராஜேஸ்வரி நேற்று முன்தினம் வடலூர் காவல் நிலையத்தில் தனது கணவர் மணிராஜ் இரண்டு பேருடன் வந்து தன் கைக்குழந்தையான லாவண்யாவை தூக்கி சென்று விட்டதாகவும் குழந்தையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். புகாரின் பெயரில் தொழுதுர் பகுதியில் ஆடு மேய்த்து வந்த மணிராஜை பிடித்து விசாரணை செய்தார்கள்.
அதில் அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து ராஜேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் ராஜேஸ்வரி பிடித்து விசாரணை செய்ததில் தனது குழந்தைக்கு காதின் கீழ் சீழ் வடிந்ததால் மருந்து போட்டதாகவும், சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் மயக்கம் ஏற்பட்டதால் இறந்துவிட்டதாக நினைத்து வடலூர் சாலையில் உள்ள ஐயனேரி அருகே கழிவுநீர் கால்வாயில் குழந்தையை வீசிவிட்டு கணவர் குழந்தையை தூக்கி சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்பகுதிக்கு சென்று இறந்து கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் தகாத உறவுக்கு இடையூறாக ஐந்து மாத குழந்தை இருந்த காரணத்தால் அதனை கொன்று சாக்கடையில் வீசி நாடகமாடி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.