national
கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். புயல் சின்னம் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
மேலும் லட்சத்தீவில் உருவான சூறாவளி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கின்றது. இதனால் கேரள மாநிலத்தில் அடுத்து 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்திருக்கின்றது.
இதனால் கண்ணூர் மற்றும் காசக்கோடு மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் பலத்த காற்று காரணமாக கேரளா கடற்கரையோரங்களில் கடல் சீற்றம் மற்றும் பலத்த அலைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் கடலோர கிராம மக்கள் கவனமுடன் இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.