Latest News
கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!
கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
கேரளாவில் ஏற்கனவே பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை நம்மால் மறந்து இருக்கவே முடியாது. கனமழை கொட்டி தீர்த்ததால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு பல கிராமமே மண்ணோடு மண்ணாக புதைந்து போனது. கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ‘கேரளாவில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
வருகிற 5-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை இருக்கும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது’ என்று இந்திய மாநில ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.