Latest News
திருப்பதி கோவிலுக்குள் வரவிடாமல் ஜெகன்மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்த முடிவு… வெளியான தகவல்…!
திருப்பதி கோவிலுக்கு வரவிடாமல் ஜெகன்மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார், இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இது அதிகாரப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டது.
சந்திரபாபு செய்த பாவத்தை போக்க ஆந்திரா முழுவதும் நாளை 28ஆம் தேதி கோவில்களில் பரிகார பூஜை நடத்தி வழிபட வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார், இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் கோவிலுக்கு நாளை சாமி தரிசனம் செய்ய வர உள்ளதாக தகவல் வெளியானது. இன்று மாலை 5 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகின்றார் .
அங்கிருந்து திருப்பதி மலைக்குச் சென்று பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகின்றார். நாளை காலை 10:30 ஏழுமலையானை தரிசிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. ஜகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகை தருவதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. ஏழுமலையான் கோவில் விதிகளின்படி அவர் மாற்று மதத்தினர் காண பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்வாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஜெகன்மோகன் ரெட்டி மாற்று மதத்தினருக்கான பதிவேட்டில் கையெழுத்திட்டால் மட்டுமே கோவிலுக்குள் வர முடியும் என்று தெரிவித்தனர். ஜெகன்மோகன் ரெட்டி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருப்பதியில் பாஜக, ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அப்போது கோ பேக் ஜெகன்மோகன் எனவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டியை திருப்பதி கோவிலுக்குள் கால் வைக்க விடமாட்டோம் என்று கோஷம் எழுப்பி வருகிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோவிலுக்குள் வருவதை தடுக்க ஆயிரக்கணக்கான இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சோதனை சாவடியில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு வருவதால் கலவரம் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி திருப்பி அனுப்புவதற்கு போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் திருப்பதியில் இந்து அமைப்பினரும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் உருவாகி இருக்கின்றது. அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.