Latest News
சர்ச்சைகள் இருந்தும்… திருப்பதி லட்டு கவுண்டரில் மளமளவென குவிந்த பக்தர்கள்…!
திருப்பதியில் வழங்கப்படும் லட்டு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில் லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தி லட்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது அதிகாரப்பூர்வமாக உறுதியான நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டது. பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் லட்டு பிரசாதத்தை வாங்கி செல்லலாம் என்றும் அறிவித்திருந்தார்கள். லட்டு தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் லட்டுகளை வாங்கி சென்றார்கள்.
லட்டு கவுண்டர்களில் வழக்கம் போல் பக்தர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் லட்டுக்களை வாங்கி சென்றார்கள். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று முதல் இன்று அதிகாலை வரை 65 ஆயிரத்து 604 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.
24,266 பேர் முடி காணிக்கை செலுத்தி இருந்தார்கள். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்படாமல் நேரடியாக சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அதிகபட்சமாக 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்திருந்தார்கள்.