வெங்காயம் மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

வெங்காயம் மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

வெங்காயம் மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் அதனை நீக்கம் செய்வதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது.

உலக அளவில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி அளவுக்கு இந்த அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நிர்ணயித்திருந்தது.

அதன்படி ஒரு டன் பாஸ்மதி அரிசி 1200 அமெரிக்க டாலர் அதாவது ஒரு லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவித்து இருந்தார்கள். இதனால் அக்டோபர் மாதம் இது 950 அமெரிக்க டாலராக குறைக்கப்பட்டது. இந்த விலைக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே ஏற்றுமதி பதிவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு குறைவாக ஏற்றுமதி செய்ய முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

வெங்காயம் ஏற்றுமதிக்கும் டன் ஒன்றுக்கு 550 அமெரிக்க டாலர்கள் என்ற குறைந்தபட்ச ஏற்றுமதி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலைக்கு குறைவாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பாஸ்மதி அரிசி மற்றும் வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்கும்படி விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தார்கள்.

இந்நிலையில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கட்டுப்பாட்டை தற்போது மத்திய அரசு நீக்கி இருக்கின்றது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஏற்றுமதி அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல் விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும் என்று மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து இருக்கின்றார்.

மேலும் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கின்றனர். இந்தியாவில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பாஸ்மதி அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகின்றது. மேலும் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் இருக்கின்றது. அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக அனைவரும் கூறி வருகிறார்கள்.