Latest News
ரத்த புற்றுநோயுடன் போராட்டம்… இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்… ஆச்சரிய சம்பவம்…!
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 22 வயது பெண் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22 வயதான பெண்ணிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஹீமாட்டாலஜி துறையின் உதவி பேராசிரியர் அக்ஷய் லகோடி இது தொடர்பாக கூறுகையில் அந்த பெண்ணுக்கு நாள்பட்ட மைலோயிட் லுகேமியா ரத்த புற்றுநோய் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் அவருக்கு சுகப்பிரசவம் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த பெண் கர்ப்பமான பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவரின் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை இயல்பை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.
எனவே கர்ப்ப காலத்தில் அவருக்கு சாதாரண புற்றுநோய் மருந்துகள் மற்றும் கீமோதெரபியை பரிந்துரைக்க முடியவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அந்த பெண்ணின் உடல்நிலை மற்றும் அவரது வயிற்றில் உள்ள இரட்டைக் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டது.
மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுமித்ரா யாதவ் இது குறித்து கூறுகையில் அந்த பெண்ணுக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக கூறப்படவில்லை. கர்ப்பகாலத்தில் அவரது மனநலம் முற்றிலும் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அந்த பெண்ணுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்து இருக்கின்றது. தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக இருக்கிறார்கள்.
இது அந்த பெண்ணின் முதல் கர்ப்பம் என்றும் இரட்டை குழந்தை பிறந்தது அவரது குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றும் அந்த மருத்துவர் தெரிவித்திருந்தார். அந்த பெண்ணிடம் கடைசி வரையில் கூறாமல் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து குழந்தையை பெற்றெடுக்க செய்திருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த புற்றுநோய்க்கான சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.