ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேஸ்ட், அதை யாரும் வாங்காதீங்க என்று பெரிய போர்டு ஒன்றை எழுதி பெங்களூரு பெண் தொங்கவிட்டு இருக்கின்றார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நிஷா என்பவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணத்தின் போது பலமுறை பழுதடைந்துள்ளது. இதனால் நிஷா சேகர் என்ற அந்த வாடிக்கையாளர் கஸ்டமர் கேர் மென்பொருளை புதுப்பித்ததாகவும் ஆனால் சிக்கல் நீடித்ததாக கூறியிருக்கின்றார்.
ஸ்கூட்டரை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்க வேண்டி இருந்தது என்றும் முழு தொகையையும் ரொக்கமாக செலுத்தியதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்க்கு எதிராக நான் விழிப்புணர்வை பரப்புவேன் என்று தெரிவித்துள்ள அவர் தனது எக்ஸ் பதிவில் தனது ஸ்கூட்டரின் படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.
அதில் அவர் பெரிய அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்திருக்கின்றார். அன்புள்ள கன்னடர்களே.. ஓலா ஒரு பயனற்ற இருசக்கர வாகனம்.. நீங்கள் ஒன்றை வாங்கினால் அது உங்கள் வாழ்க்கையை கடினமாக்கும். தயவு செய்து ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்காதீர்கள் விரக்தி அடைந்த ஓலா வாடிக்கையாளர் என கையெழுத்திட்டு போட்டு இருக்கின்றார்.
தனது ஸ்கூட்டரில் பிளக்ஸ் கார்டை தொங்கவிட்டு அதை அனைவரும் பார்க்கும்படி வைத்து இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் அதை பார்க்கும் அனைவருக்கும் வாகனத்தை பற்றி யோசிக்கும் படியும் அதை வாங்குவதை பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.