Latest News
முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்… அடுத்து நடக்கப்போவது என்ன…?
முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கின்றார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதை தொடர்ந்து அதில் சட்டவிரோதமான பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கைது செய்த அவரை திகார் சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
ஆனால் அதற்கு முன்பு ஜூன் 26 ஆம் தேதி மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் ஆறு மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இன்று மதியம் தொடங்கிய கட்சிக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார். கட்சியினர் மத்தியில் பேசியவர் சட்டத்தின் நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைத்து விட்டது.
இப்போது மக்களின் நீதிமன்றத்தில் நான் நீதியை பெறுவேன். எனக்கு ஆணையிட்டால் மட்டுமே நான் மறுபடியும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன். ஆதரவு கேட்டு மக்களிடம் தான் செல்ல உள்ளேன். அடுத்த வருடம் நடக்கவுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலை மகாராஷ்டிரா தேர்தலுடன் வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். மேலும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேறொரு ஆம் ஆத்மி தலைவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கின்றார்.