national
மேக வெடிப்பு… ஒரு கிராமமே காலி, ஒரே ஒரு வீடு தப்பியது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
இந்தியாவில் பருவமழை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் சிக்கி தவித்து வருகின்றன. சமீபத்தில் பருவமழை காரணமாக கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365 அதிகரித்து இருக்கின்றது. தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.
200 பேர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. வயநாடு இயற்கை பேரிடர் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த புதன்கிழமை இரவு மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கனமழை பெய்து ஒரு கிராமம் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதில் ஒரு வீடு மட்டுமே எஞ்சி இருக்கின்றது. அந்த வீட்டை சேர்ந்த நபர்கள் கூறியதாவது “புதன்கிழமை இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தோம். பலத்த இடியுடன் வீடு உளுங்கியது. இதையடுத்து நாங்கள் வெளியில் வந்து பார்த்தபோது, கிராமம் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்று இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தோம்.
இந்த பேரழிவில் எனது வீடு மட்டுமே தப்பியது. ஆனால் மற்ற அனைவரும் என் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்று கூறியிருந்தார். மேலும் அதே கிராமத்தை சேர்ந்த வயதான பக்ஷி ராம் என்பவர் கூறியதாவது எனது குடும்பத்தினர் 14 முதல் 15 பேர் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான செய்தி எனக்கு அதிகாலை 2 மணிக்கு கிடைத்தது.
அப்போது ராம்பூரில் இருந்ததால் நான் உயிர் தப்பினேன். காலை இங்கு வந்து பார்த்தபோது எல்லாமே அழிந்து விட்டன என்று கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார். மேலும் எனது குடும்பத்தினரை தேடி வருகிறேன் என்று அவர் பேசியிருந்தார். மேக வெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகியுள்ள நிலையில் 6 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதி இருப்பவர்களை கண்டுபிடிக்க மீட்பு படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.